முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நல குறைவால் கடந்த 12-ந் தேதி நள்ளிரவு 12.15 மணி அளவில் காலமானார். உடன...
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நல குறைவால் கடந்த 12-ந் தேதி நள்ளிரவு 12.15 மணி அளவில் காலமானார்.
உடனடியாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட சுற்றுப்பயணங் களை ரத்து செய்துவிட்டு சென்னையில் இருந்து இரவோடு இரவாக தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்திற்கு புறப்பட்டு சென்றார்.
சேலத்தில் தாயாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதோடு, இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து தாயாரின் காரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அங்கேயே தனது வீட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் காரியங்களை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்- அமைச்சர் இல்லத்தில் நேற்று காலை தவுசாயம்மாளின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் துக்கம் விசாரிப்பதற்காக நேற்று மாலை 5.15 மணி அளவில் முதல்-அமைச்சர் இல்லத்துக்கு வருகை தந்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட தவுசாயம்மாளின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல்தெரிவித்தார்.
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சரிடம் நேரில் துக்கம் விசாரிப்பதற்காக நேற்று காலை 9.54 மணிக்கு முதல்- அமைச்சர் இல்லத்துக்கு வருகை தந்தார். அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தவுசாயம்மாளின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். அப்போது முதல்- அமைச்சர் தனது தாயாரின் நினைவலைகளை மு.க.ஸ்டாலினுடன் பகிர்ந்து கொண்டார்.
மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். அவர்களும், தவுசாயம்மாளின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், மு.க.ஸ்டாலின் காலை 10 மணிக்கு அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக முதல்-அமைச்சரின் தாயார் இறந்த தகவல் தெரிந்ததும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்ததோடு, இரங்கல் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பியதும், மு.க.ஸ்டாலின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்- அமைச்சரின் இல்லத்துக்கு வந்து எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியது அரசியல் நாகரிகமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அ.தி.மு.க. தரப்பில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று உடல்நலம் விசாரித்ததும், கருணாநிதி மரணம் அடைந்தபோது, சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன் ஆகியோரும் தவுசாயம்மாளின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதேபோன்று, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பெண் நீதிபதி வி.எம்.வேலுமணி ஆகியோரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். ‘மாலை முரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், தவுசாயம்மாள் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினார்.
தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அப்சரா ரெட்டி, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை சா.துரைசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தவுசாயம்மாள் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தலைமை செயலாளர் கே.சண்முகம், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கூடுதல் தலைமை செயலாளர்கள் விக்ரம் கபூர், பணீந்திர ரெட்டி, தயானந்த் கட்டாரியா, சந்தீப் சக்சேனா, ஹர்மந்தர் சிங், அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய இயக்குனர் வெ.இறையன்பு, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக் குனர் பொ.சங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் தவுசாயம்மாள் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் வெங்கடராம ராஜா, செட்டிநாடு குழுமத்தின் தலைவர் அய்யப்பன், வேல்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் ஐசரி கணேஷ், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் டி.ராஜேந்திரன், கே.பாக்கியராஜ், பார்த்திபன், ரமேஷ் கண்ணா, விஜய் சேதுபதி, அப்சல், உதயா, நடிகைகள் ராதிகா சரத்குமார், வெண்ணிற ஆடை நிர்மலா, பூர்ணிமா பாக்கியராஜ், குட்டி பத்மினி, சித்ரா, சங்கீதா, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் சுவாமிநாதன், திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகான், இசையமைப்பாளர்கள் தேவா, தீனா.
நியூஸ் 7 தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன், வின் டி.வி. நிர்வாக இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரும் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு வருகை தந்து அவரது தாயாரின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
No comments