குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் ரெயில் நிலையம் உள்ளது. இதன் அருகே ஜல்லிகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தை பராமரித்தல் உள்ளி...
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் ரெயில் நிலையம் உள்ளது. இதன் அருகே ஜல்லிகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இந்த ஜல்லிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் இருந்து ஜல்லிகள் சரக்கு ரெயில் மூலமாக பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. அதன்படி நேற்று மதியம் 10 பெட்டிகள் உடைய சரக்கு ரெயிலில் ஜல்லிகள் ஏற்றப்பட்டு புறப்பட்டது.
இந்த ரெயில் கிளம்பிய சிறிது நேரத்தில், அதாவது மெயின் தண்டவாளத்தை ஒட்டிய துணை தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கார்டு பெட்டியும், அதனை அடுத்து உள்ள 2 சரக்கு பெட்டியும் அடுத்தடுத்து தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்டியில் உள்ள சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகி தரையில் நின்றன. இதனால் ரெயிலை இயக்க முடியவில்லை. அதோடு அருகில் இருந்த கம்பத்தில் மோதியபடி ரெயில் நின்றது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் வேகமின்றி இயக்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனே இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மேலும் மீட்பு பணிக்காக திருவனந்தபுரத்தில் இருந்து தனி ரெயில் மூலம் என்ஜினீயர்கள், ஊழியர்கள் என 60 பேர் கொண்ட குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் ஊழியர்கள், தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை எந்திரங்களை கொண்டு சரி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.
பயணிகள் ரெயில் செல்லும் தண்டவாளத்தில் விபத்து நடக்காமல், அதை ஒட்டி உள்ள துணை தண்டவாளத்தில் ரெயில் தடம் புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்படவில்லை. மதியம் 2 மணிக்கு சரக்கு ரெயில் விபத்துக்குள்ளானது, அதன்பிறகு மீட்பு பணி விடிய, விடிய நடந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments