வங்கக்கடலில் உருவான ‘புரெவி‘ புயல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாம்பன்-குமரிக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது....
வங்கக்கடலில் உருவான ‘புரெவி‘ புயல் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாம்பன்-குமரிக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் குமரி மாவட்டம் வந்து தயார் நிலையில் உள்ளனர்.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் ‘புரெவி‘ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நேற்று மாவட்ட கலெக்டர் அரவிந்த் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்துக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், அங்குள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், கலெக்டர் அரவிந்த், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களுக்கு அவர்களது சேட்டிலைட் போன் மூலம் அவர்கள் இருக்கும் கடல் பகுதியின் அருகில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்குமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து 133 விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றுள்ளன. அதில் 14 படகுகள் மால்பே பகுதியிலும், 35 விசைப்படகுகள் லட்சத்தீவிலும், 33 படகுகள் கொல்லம் கடல் பகுதியிலும் உள்ளனர். அவர்களை உடனடியாக அருகில் உள்ள துறைமுகப்பகுதிகளில் கரை ஒதுங்குமாறு கூறியுள்ளோம். மற்ற படகுகள் ரத்தனகிரி, கோவா கடல் பகுதியில் உள்ளனர். அவர்களையும் அப்பகுதியில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மீனவர்களுக்கு தகவல் கிடைப்பதில் சிரமம் உள்ளது. மீனவர்கள் அவர்கள் வைத்திருக்கும் சேட்டிலைட் போனை ஆன் செய்தால் தான் நாம் கொடுக்கும் தகவல் சென்று சேரும். சில மீனவர்கள் சேட்டிலைட் போனை ஆன் செய்யவில்லை. ஆனாலும், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். மேலும், 4 மீனவ கிராமங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அணைகளை பொருத்தவரை பாதுகாப்பாக உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களில் தங்க வைக்கவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாமிரபரணி ஆற்றின் கரையோர கிராமங்களில் கலெக்டர் அரவிந்த் நேற்று காலை ஆய்வு செய்தார். அவருடன் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், குளச்சல் உதவி சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் (பொறுப்பு) சங்கரலிங்கம், தாசில்தார் ராஜசேகர் ஆகியோர் வெள்ளம் ஏற்பட்டால் மிகவும் பாதிக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியான பார்த்திபபுரம் பகுதியை பார்வையிட்டனர். பின்னர், கலெக்டர் அப்பகுதி மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
No comments